சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ், கழிவுகளை சிற்பங்களாக மாற்றியுள்ளது.
சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ், கோல் இந்தியாவின் துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் (எஸ்.இ.சி.எல்) தூய்மைப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒரு படி மேலே சென்று, நிலக்கரி சுரங்கக் கழிவுப் பொருட்களை அழகான சிற்பங்களாக மாற்றி வருகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தூய்மையை மையமாகக் கொண்டு, அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கழிவுப்பொருட்களை குறைக்கும் வகையில் சிறப்பு இயக்கம் 3.0 நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. பயன்படுத்த முடியாத அளவுக்கு பயனற்ற கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதும் இந்தப் இயக்கத்தின் ஒரு முக்கிய நோக்கம் ஆகும்.
எஸ்.இ.சி.எல்லின் ஜமுனா கோட்மா பகுதி சிறப்பு இயக்கம் 3.0 செயல்பாடுகளின் கீழ் “கழிவிலிருந்து சிற்பம் வரை” என்ற முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் நிலக்கரி சுரங்கங்களின் கழிவுப் பொருட்களை பல்வேறு படைப்பு சிற்பங்களாக மாற்றுவதாகும்.
மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜமுனா கோட்மா பகுதியில் உள்ள பங்கிம் விஹார் என்ற இடத்தில் நிலக்கரி சுரங்க கழிவுகளால் செய்யப்பட்ட இந்தச் சிற்பங்களைக் காட்சிப்படுத்த பொதுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
நிறுவப்பட்ட சிற்பங்களில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளி, சிங்கம், கொக்கு பறவை, பூ ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்தச் சிற்பங்கள் கோட்மா நிலக்கரி சுரங்கத்தின் பிராந்திய பட்டறையில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன, மேலும் இந்த சிற்பங்களை வடிவமைப்பதில் ஏராளமான பெண் ஊழியர்களும் ஈடுபட்டனர்.
நடப்பு சிறப்பு இயக்கம் 3.0-ன் போது, நிலக்கரி பொதுத்துறை நிறுவனம் ஏற்கனவே சுமார் 1344 மெட்ரிக் டன் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்தியுள்ளது, இதன் மூலம் ரூ.7 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.