ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் 13 வது லீக் சுற்றில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதயுள்ளன.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானதில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், இன்றையப் போட்டி மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்ப ஆர்வம் காட்டி வருகிறது. இங்கிலாந்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியுற்றாலும், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் மூலம் இங்கிலாந்து அணி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இதனால், அந்த வெற்றியை தொடர இங்கிலாந்து அணி தீவிரம் காட்டுகிறது.
இந்த இரு அணிகளும் இதுவரை 2 முறை ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த இரண்டிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டி நடைபெறும் அருண் ஜெட்லி மைதானம், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைகிறது. போட்டியின் இரண்டாம் பாதியில் பனி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதன் காரணமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யக்கூடும்.
இங்கிலாந்து அணி தரமான முன்கள வீரர்கள், ஆல்-ரவுண்டர்களால் நிரம்பிய வலுவான மிடில் ஆர்டரை கொண்டு பேட்டிங்கில் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால், மிடில் ஆர்டர் வீரர்கள் ரன் சேர்ப்பதில் கடந்த 2 போட்டியிலும் தடுமாறியது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சு மற்றும் பில்டிங்கிலும் அந்த அணி வலுவாகவே காட்சியளிக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் பலமாக கருதப்படும் சுழற்பந்து வீச்சு இந்த முறை எடுபடாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இங்கிலாந்து அணி 87% வெற்றி பெரும் என்றும் ஆப்கானிஸ்தான் அணி 13% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.