இ-சிகரெட் உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது, பயன்படுத்தினால் ரூ.3 லட்சம் அபராதம், 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக அளவில் புகையிலையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 2 -ம் இடம் வகிக்கிறது. மேலும், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள், புகையிலைப் பொருட்களால் ஆண்டுதோறும் உயிரிழப்பைச் சந்திக்கின்றனர். அதில் மிக முக்கியமானது சிகரெட்.
இதனால், இ-சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், இ-சிகரெட் உற்பத்தி செய்வது, ஏற்றுமதி செய்வது, இறக்குமதி செய்வது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது, சேமித்து வைப்பது, விளம்பரம் செய்வது அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், கடைகளில் நேரடியாக விற்பனை செய்ய முடியாததால், ஆன் லைன் மூலம் இ-சிகரெட் விற்பனை களைகட்டியுள்ளது. ரூ.1200 முதல் 3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வழக்கமான சிகரெட்டைப் போல நெருப்பு இல்லை. புகை வெளியே வராது. துர்நாற்றம் வீசாது என ஆசை வார்த்தை கூறுவதால், இ-சிகரெட் மீதான மோகம் அதிமாகி விற்பனையும் அதிகரித்துள்ளது.
இ-சிகரெட்டால், தலைவலி, தொண்டையில் எரிச்சல், அரிப்பு, நுரையீரல் புண், வீக்கம், இருமல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது, ஏன் உயிரிழப்பு கூட ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
மேலும், இ- சிகரெட்டைப் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதமும், 1 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். தொடர்ந்து பயன்படுத்தினால், 3 ஆண்டுகள் வரையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.