முடியுமா என்கிற கேள்விக்கு இஸ்ரோதான் பதிலளித்தது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருக்கிறார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில், அவரது 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சோம்நாத், “நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முடியுமா என்று உலக நாடுகள் யோசித்தபோது, அந்த திறமையை நிலைநாட்டியது இந்தியாதான்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகளவில் சிறந்த நாடு என்று இந்தியா காட்டி இருக்கிறது. முடியுமா, முடியாதா என்கிற கேள்விகளுக்கு இஸ்ரோதான் பதிலளித்திருக்கிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்து சாதாரணக் கல்வியை படித்தவர் அப்துல்கலாம். அவர் இஸ்ரோ பொறியாளர், ராக்கெட் பொறியாளர், குடியரசுத் தலைவர் என பல பரிமாணங்களில் முன்னேறியவர். நீங்களும் அதுபோல் முன்னேற வேண்டும்.
நானும் சாதாரண பள்ளியில் படித்தவன்தான். அனைத்து சமூக மக்களின் அன்பையும் பெற்று வருகிறேன். ஒரு முறை பி.எஸ்.எல்.வி. தோல்வியடைந்தபோது, குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை சந்தித்து விளக்கினோம். அப்போது, சரமாரியாகக் கேள்வி எழுப்பியவர், எதிர்காலத்தில் இதுபோல் நடக்காதவாறு இருக்க அறிவுரை வழங்கினார். அதை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். அடுத்த 25 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா இருக்கும்” என்றார்.