முதல்வரும், பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விட்டிருக்கும் நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தெலங்கானா மாநிலத்தில் பிரச்சாரம் செய்யவிருப்பதாக பா.ஜ.க. தெரிவித்திருக்கிறது.
தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் பி.ஆர்.எஸ். கட்சி 88 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் வெற்றிபெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. பா.ஜ.க. 1 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தெலங்கானாவைப் பொறுத்தவரை, ஆளும் பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆகவே, 3 கட்சிகளும் ஏற்கெனவே தேர்தலை பிரசாரத்தைத் தொடங்கி விட்டன.
இந்த நிலையில், தெலங்கானாவில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று காலை வெளியிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, இன்று காலை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ், மாநில மக்களுக்கு 400 ரூபாய்க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்றும், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி விட்டிருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தெலங்கானா மாநிலத்தில் அக்டோபர் 18-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர். அதேபோல, தெலங்கானா பி.சி.சி. கட்சி, மாநிலம் முழுவதும் உயர்மட்டத் தலைவர்களின் பஸ் யாத்திரையை தொடங்க உள்ளது. இந்த பஸ் யாத்திரையில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கலந்து கொள்கின்றனர்.
அதேசமயம், தெலங்கானாவில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில்தான், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவிருப்பதாக பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. அதன்படி, ஹுசூராபாத் (கரீம்நகர்) மற்றும் மகேஷ்வர் (ரங்காரெட்டி) ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ராஜ்நாத் சிங் உரையாற்றுகிறார்.