எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல், பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது அறிவிக்கப்படாத போரை அரங்கேற்றினர். அரை மணி நேரத்திற்குள் கண்மூடித்தனமாக 7,000 ஏவுகணைகளை செலுத்தி இஸ்ரேலை நிலைகுலைய வைத்தனர். எனினும், சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், விமானப் படை மூலம் காஸா நகரில் குண்டு மழை பொழிந்து வருகிறது.
அதேபோல, பீரங்கி மூலமும் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும், காலாட்படை வீரர்களும் காஸா நகருக்குள் புகுந்து ஹமாஸ் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். இத்தாக்குதல்களில் இஸ்ரேல் தரப்பில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கம் நிலையில், 3,600-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
அதேபோல, காஸா தரப்பில் ஹமாஸ் தீவிரவாதிகள் 200-க்கும் மேற்பட்டோர் உட்பட 2,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 5,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். அதோடு, காஸா நகரின் முக்கிய மின்நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், காஸா நகரமே இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
இது தவிர, நீர்நிலைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதேசமயம், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் தீவிரவாதிகள், சுமார் 200 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றிருக்கின்றனர்.
இந்த நிலையில்தான், எவ்வித நிபந்தனையும் இன்றி, ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் குட்டரெஸ் வெளியிட்டிருக்கும் பதிவில், “நாம் மத்திய கிழக்கில் அபாயத்தின் விளிம்பில் இருப்பதால், எனக்கு 2 மனிதாபிமான வேண்டுகோள்கள் உள்ளன.
முதல் கோரிக்கை ஹமாஸ் அமைப்பினருக்கானது. எவ்வித நிபந்தனையும் இன்றி பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இரண்டாவது கோரிக்கை இஸ்ரேலுக்கானது. காஸாவில் உள்ள பொதுமக்களின் நலனுக்காக மனிதாபிமான உதவிகளை செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த 2 நோக்கங்களில் ஒவ்வொன்றும் நிச்சயமாக செயல்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.