பிரதிநிதிகளின் பங்கேற்பைப் பொறுத்தவரை, சமீபத்தில் முடிவடைந்த டெல்லி பி20 உச்சி மாநாடு மிகவும் வெற்றிகரமாக இருந்தது என்று மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா கூறியிருக்கிறார்.
இந்தியா தலைமையிலான ஜி20 உச்சிமாநாடு டெல்லியில் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இம்மாநாட்டில் டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளின் தலைவர்களாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டைத் தொடர்ந்து, ஜி20 நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்ட பி20 உச்சிமாநாடு டெல்லியில் நடைபெற்றது. இம்மாநாடு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, “ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 436 பிரதிநிதிகள் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பாக, பொறுப்பான AI மேம்பாடு மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான பரிமாணங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை அனைத்து நாடுகளும் வலியுறுத்தின. மேலும், சட்டமன்ற வரைவுக்கான கள அறிவை மேம்படுத்த ஒரு குழுவை உருவாக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்தார்.