தமிழகத்தில் மார்பக புற்றுநோயால், ஒரு இலட்சம் பெண்களில், 52 பெண்கள் பாதிக்கப்படுவதாக, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்பக புற்றுநோய் பெண்களுக்குத்தான் அதிகம் ஏற்படும் புற்றுநோயாக உருவெடுத்து உள்ளது. வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும், மரபணு வாயிலாகவும் மார்பக புற்றுநோயால், இளம் வயதிலேயே பெண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, உரிய சிகிச்சை பெற்றால், மார்பகங்களை அகற்றாமல் குணப்படுத்தலாம். ஆனால், முற்றிய நிலையில் கண்டறியப்படும் போது, உயிரிழப்பு ஏற்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன், ஒரு இலட்சம் பெண்களில், 27 பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்து, 52 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, மார்பக புற்றுநோய் மருத்துவர் கூறியதாவது, ஒரு இலட்சம் பெண்களில், ஐம்பது பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளவர்களாக உள்ளனர்.
மார்பக புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறியாமல் விடுவதே உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேம்பட்ட நவீன மருத்துவ வசதிகள் இருந்தாலும், தொலைதூர கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, இவை கிடைக்காத நிலை உள்ளது.
மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணி இல்லை என்றாலும், உணவு முறை மாற்றம், உடல்சார் செயல்பாடு, உடல் எடை போன்ற காரணிகள் வாய்ப்பாக உள்ளன. ஹார்மோன் சார்ந்த மாற்றங்களும், 90 சதவீதம் மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பாக அமைகின்றன. மார்பக புற்றுநோய் குறித்து, இளம் வயதிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அறிகுறிகள் இருந்தால், மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம் என்று தெரிவித்தார்.