சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமரச அரசியலை தொடரும். அதேசமயம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்போம். ஊழல்வாதிகளும் தூக்கிலிடப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காட்டமாகக் கூறினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. எனவே, இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், இரு கட்சிகளும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டிருக்கின்றன.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்கான் நகரில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உணவுச் சங்கிலி போல டெல்லி வரை ஊழல் சங்கிலியை காங்கிரஸ் அரசு உருவாக்கி இருக்கிறது. சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், ஊழல்வாதிகளிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் மீட்டெடுப்போம். அதேபோல, ஊழல்வாதிகள் தூக்கிலிடப்படுவார்கள்.
பிரிக்கப்படாத மத்தியப் பிரதேசம்-சத்தீஸ்கர் காங்கிரஸ் ஆட்சியில் பின்தங்கிய மாநிலமாக இருந்தது. ஆனால், பா.ஜ.க.வைச் சேர்ந்த ராமன் சிங் ஆட்சிக்கு வந்த (2003-ல்) பிறகு 15 ஆண்டுகளில் வளர்ந்த மாநிலமாக மாறியிருக்கிறது. பெமேதரா மாவட்டத்தின் பிரான்பூர் கிராமத்தில் ஏப்ரல் மாதம் வகுப்புவாத வன்முறையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த புனேஷ்வர் சாஹு கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது, காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது?
புனேஷ்வர் சாஹுவின் கொலைகாரனை நீதியின் முன்பு நிறுத்துவோம். அவரது தந்தைக்கு தேர்தலில் சீட் கொடுத்திருக்கிறோம். சத்தீஸ்கர் மீண்டும் வகுப்புவாத கலவரத்தின் மையமாக மாற விரும்புகிறீர்களா? புனேஷ்வர் சாஹுவுக்கு நீதி கிடைக்குமா, கிடைக்காதா? காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமாதான மற்றும் வாக்கு வங்கி அரசியலையே தொடரும்.
சத்தீஸ்கரில் வாக்கு எண்ணிக்கை நாளான டிசம்பர் 3-ம் தேதி தாமரை மலரும் என்பதை மக்களின் உற்சாகம் காட்டுகிறது. வரவிருக்கும் தேர்தல்கள் எந்தவொரு அரசாங்கத்தையும் அல்லது எம்.எல்.ஏ.க்களையும் தேர்ந்தெடுப்பதற்காக அல்ல. மாறாக, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஒரு பொன்னான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக” என்று கூறினார்.