கடந்த ஜூன் 14 -ம் தேதி சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஆனால், செந்தில் பாலாஜிக்கு திடீர் இருதய கோளாறு காரணமாக, தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்படாமல் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். இதற்கு, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனிடையே, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து கடந்த 10 -ம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்பியும் வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ, செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு சிறப்பு சிகிச்சை தேவைப்படுகிறது. அதனால், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்றார்.
இதற்கு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளித்தால் அவர் வழக்கின் சாட்சியங்களை கலைத்து விடுவார் என எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜெயசந்திரன், தேதி குறிப்பிடாமல் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார்.