தமிழகத்தில் 35 இடங்களில் ஆர்.எஸ்எஸ். பேரணி நடத்தச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் வரும் 22 -ம் தேதி மற்றும் 29 -ம் ஆகிய தேதிகளில் பேரணி நடத்த காவல்துறையினரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இதனால், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் 22 -ம் தேதி மற்றும் 29 -ம் ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 35 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை மனு தாக்கல் செய்தது.
இதற்கு பதில் மனுத் தாக்கல் செய்த காவல்துறை, ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை.
மேலும், பசும்பொன் தேவர் குருபூஜை ஆகியவை உள்ளதால் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தலாம்.
மேலும், சீருடை இல்லாமல் பேரணியில் யாரையும் அனுமதிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கியது.
இது தொடர்பாகப் பேசிய வழக்கறிஞர் பிரபு மனோகர், தமிழகத்தில் 35 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்த ரிட் பெட்டிசன் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார். குறிப்பாக, 22 -ம் தேதி மற்றும் முதல் 29 -ம் தேதிகளில் பேரணி நடத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளார் என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு வழக்கம் போல் காவல்துறையும், தமிழக அரசும் அற்ப காரணங்களைச் சொல்லி தடை போட்டனர். அவை நகைச்சுவையாகவும், கீழமையாகவும் இருந்தது. ஆனாலும், 20-ம் தேதிக்குள் 35 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது என்றார்.