வருமானத்திற்கு அதிகமாக 74.93 கோடி ரூபாய் சொத்து குவித்தாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா அரசில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. இதில், எரிசக்தித்துறை அமச்சராக இருந்தவர் சிவகுமார்.
அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதனையொட்டி, கடந்த 2017-ம் ஆண்டு சிவகுமார் தொடர்புடைய 70-கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.
இதனையடுத்து, 74.93 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்ததாக சிவகுமார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த விசாரணைக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் அதிரடியாக தடைவிதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதிகள் அனிருத்தா, பெலா எம் திரிவேதி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான சொலிட்டர் ஜெனரல் இந்த வழக்கில் 90 சதவீதம் விசாரணை முடிவடைந்துவிட்டது. எனவே, தடையை நீக்க வேண்டும் என கோரியது.
இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.