திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாகப் புகார் தொடர்பாக, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்தனர். சந்திரபாபு நாயுடு தற்போது ராஜமுந்திரி மத்தியச் சிறையில் அக்டோபர் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். 73 வயதாகும் சந்திரபாபு கடந்த 34 நாட்களாகச் சிறையில் உள்ளார்.
சிறையில் அதிக வெப்பம் மற்றும் போதிய வசதிகள் இல்லாததால் சந்திரபாபுவுக்குத் தோல் ஒவ்வாமை மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக, சிறைத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோதும் நாயுடுவுக்கு உடல் நிலை குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, சந்திரபாபுவை அவரது மனைவி புவனேஸ்வரி, மருமகள் பிராம்மனி ஆகியோர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில், சந்திரபாபு மகனும், தெலுங்கு தேசம் பொதுச் செயலாளருமான லோகேஷ் கூறும்போது, எனது தந்தைக்குச் சிறையில் போதிய மருத்துவச் சிகிச்சை அளிக்க ஆந்திர அரசு தவறிவிட்டது. அவரது எடை 5 கிலோ குறைந்துள்ளது. அவருக்கு எடை மேலும் குறைந்தால் அவரது சிறுநீரகம் பாதிக்கும் நிலை உள்ளது. மேலும், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றார்.
இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.