இஸ்ரேலில் இருந்து நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மேலும் 286 இந்தியர்கள் டெல்லியை வந்தடைந்தனர். அவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.
இஸ்ரேலுக்கும் காஸா நகரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது. இதில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இஸ்ரேல் சென்ற ஏராளமான இந்தியர்கள், அந்நாட்டில் சிக்கித் தவித்து வருகின்றனர். ஆகவே, இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக ஆபரேஷன் அஜய் திட்டத்தை இந்தியா கையில் எடுத்தது.
அதன்படி, இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் தலைநகரமான டெல் அவிவுக்கு தனி விமானங்களை இந்தியா அனுப்பி வைத்தது. இதில், முதல் விமானம் இஸ்ரேலில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை டெல்லியை வந்தடைந்தது. இந்த தனி விமானத்தில் 212 இந்தியர்கள் வந்தனர்.
தொடர்ந்து, 2 மற்றும் 3-வது விமானங்கள் சனிக்கிழமை காலை மற்றும் மாலையில் டெல்லியை வந்தடைந்தன. இந்த இரு விமானங்களிலும் 235 மற்றும் 197 இந்தியர்கள் வருகை தந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 4-வது தனி விமானம் டெல்லியை வந்தடைந்தது. இதில், 274 இந்தியர்கள் வருகை தந்தனர். இதன் மூலம் மொத்தம் 918 பேர் இஸ்ரேலில் இருந்து இந்தியா வந்தடைந்தனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இஸ்ரேலில் இருந்து 5-வது தனி விமானம் டெல்லியை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 286 இந்தியர்களும், நேபாள் நாட்டைச் சேர்ந்த 18 பேரும் வருகை தந்தனர். இவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், டெல்லி விமான நிலையத்தில் தேசியக்கொடியைக் கொடுத்து வரவேற்றார்.
இதன் மூலம் மொத்தம் 1,204 இந்தியர்கள் இஸ்ரேலில் இருந்து பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். மேலும், ஆபரேஷன் அஜய் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும், தாயகம் திரும்பி விரும்பும் இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என்றும் மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்திருக்கிறது.