கோவிலுக்கு தக்கார் அல்லது செயல் அலுவலரை நியமனம் செய்வதற்கு முன், அறநிலையத்துறை அதிகாரிகள் நிதானமாகச் செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் ஆளத்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், சிவகங்கை மாவட்டம் ஆளத்திபட்டி பகுதியில் ஆளத்திக்காடு அய்யனார் கோவில் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த கிராம கோவில்.
அறங்காவலர்களிடையே எந்த சர்ச்சையும் இல்லை. முறைகேடு நடந்ததாகபுகாரும் இல்லை. ஆனால், கோவிலுக்கு தக்கார் மற்றும் செயல் அலுவலரை நியமித்து சிவகங்கை அறநிலையத்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அதை இரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதுகுறித்து நீதிபதி கூறியதாவது, தக்காரை நியமிப்பதற்கு முன் அறநிலையத்துறை தரப்பில் அறிவிப்பு வெளியிடவில்லை.
தக்காரின் பதவிக்காலத்தை வரையறுத்துக் குறிப்பிடவில்லை. எனவே, தக்கார் நியமன உத்தரவு சட்டவிரோதமானது என்பதால், இரத்து செய்யப்படுகிறது. அறங்காவலர்கள் இல்லாத இடங்களில் தக்கார் அல்லது செயல் அலுவலரை நியமிக்கலாம். கோவில் நிர்வாகத்தை அபகரிக்கும் நோக்கில் செயற்கையாக ஒரு சூழ்நிலையை அறநிலையத்துறை உருவாக்கக்கூடாது.
கோவில்களின் நிர்வாகம் மக்களால் மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் பதிவு செய்ய இந்நீதிமன்றம் கடமைப்பட்டுள்ளது. அதைத் தொந்தரவு செய்தால், மக்கள் வழக்குத் தொடர அல்லது வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். அதை அரசு எதிர்கொள்ள வேண்டும். வழக்கு தொடர்ந்தால் அறநிலையத்துறைக்கு எதிரான வழக்குகளால் நீதிமன்றங்கள் நிரம்பி வழியும். வேலையின்றி இருந்தால், அது தவறான மனநிலையை உருவாக்கும்.
இதனால் ஏற்படும் கொந்தளிப்பைக் கையாள வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கும். தக்கார் அல்லது செயல் அலுவலரை நியமிப்பதற்கு முன் அறநிலையத்துறை அதிகாரிகள் சிறிது நிதானத்துடன் செயல்பட வேண்டும். இயந்திரத்தனமாக நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவித்தார்.