அடுத்த உத்தரவு வரும்வரை, அக்டோபர் 31-ம் தேதிக்குப் பிறகும் சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு தொடரும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது.
நாட்டில் சர்க்கரையின் விலை உயர்வை தடுக்கவும், நிலையானதாக இருக்கச் செய்யவும், சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி தடை விதித்தது. அப்போது, இத்தடை அக்டோபர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால், திடீரென 2023 அக்டோபர் 31-ம் தேதி தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், அடுத்த உத்தரவு வரும்வரை அக்டோபர் 31-ம் தேதிக்குப் பிறகும், சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இத்தகவலை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது. இதன்படி, கச்சா சர்க்கரை, வெள்ளை சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் ஆர்கானிக் சர்க்கரை ஆகியவை ஏற்றுமதி கட்டுப்பாடுகளின் கீழ் வருகின்றன.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சலுகை மற்றும் டி.ஆர்.க்யூ. ஒதுக்கீட்டின் கீழ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கு இக்கட்டுப்பாடு பொருந்தாது என்றும் தெரிவித்திருக்கிறது. அதேசமயம், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை மேலும் 7 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.