நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க இலஞ்சம் வாங்கியதாக, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி. நிஷிகாந்த் துபே அளித்துள்ள புகாரை, ஒழுங்கு நடவடிக்கை குழு அக்டோபர் 26- ஆம் தேதி விசாரிக்கிறது.
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.-யான மஹுவா மொய்த்ரா இலஞ்சம் வாங்கியுள்ளதாக, பா.ஜ.கவைச் சேர்ந்த நிஷிகாந்த் துபே புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மாநிலங்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா. இவர் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கத் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் இலஞ்சம் வாங்கியிருக்கிறார்.
2019 – 2023-க்கு இடையில், நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிராநந்தனியின் உத்தரவின் பேரில் இருந்து கேட்கப்பட்டவை. இந்த கேள்விகளைக் கேட்டதற்காக திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினர்க்கு ஹிரநந்தனி குழுமம் ரூபாய் 2 கோடியும், விலையுயர்ந்த ஐபோன் போன்ற பரிசுகளையும் கொடுத்திருக்கிறது.
மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூபாய் 75 இலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆதாரங்கள் உள்ளன’ என, குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை, பா.ஜ.க,வை சேர்ந்த வினோத் குமார் சோன்கர் தலைமையிலான, மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஆய்வுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுப்பினார்.
இந்த நிலையில், புகாரை, ஒழுங்கு நடவடிக்கை குழு அக்டோபர் 26-ஆம் தேதி விசாரிக்கிறது. விசாரணையில் இலஞ்சம் பெற்றது யாரிடம் என்பது குறித்து தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.