மிசோரம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் அடங்கிய 2 பட்டியல்களை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டிருக்கிறது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி, மேற்கண்ட 5 மாநிலங்களிலும் நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது, வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இதையடுத்து, இம்மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், மிசோராம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்து விட்டது.
இந்த நிலையில், பா.ஜ.க. 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை 2 கட்டமாக வெளியிட்டிருக்கிறது. காலையில் 12 பேர் அடங்கிய முதல் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது. இப்பட்டியலின்படி, அக்கட்சியின் மிசோரம் பிரிவுத் தலைவர் வன்லால்முகா தம்பா தொகுதியில் தேர்தலில் போட்டியிடுகிறார். மிசோரம் சட்டமன்ற முன்னாள் தலைவர் லால்ரின்லியானா சைலோ, மமித் தொகுதியில் போட்டியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, மாலையில் 9 பேர் அடங்கிய 2-வது பட்டியலை வெளியிட்டது. இப்பட்டியலின்படி, எஃப்.வான்மிங்தங்கா துய்ரியால் தொகுதியிலும், ஆர்.லால்தாங்லியானா கோலாசிப் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். ஜூடி சோமிங்லியானி துவாவல் தொகுகுதியில் போட்டியிடுகிறார்.