நாய்க் குட்டிக்கு நூரி என்று பெயர் வைத்து, தனது தாய் சோனியா காந்திக்கு பரிசளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஒருவர் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, இம்மாதத் தொடக்கத்தில் கோவா மாநிலத்துக்குச் சென்றிருந்தார். அப்போது, அம்மாநிலத்தைச் சேர்ந்த நாய் வளர்ப்பாளர்களான ஷர்வானி பித்ரே, அவரது கணவர் ஸ்டான்லி பிரகன்கா ஆகியோரிடம் ஜாக் ரஸ்ஸல் டெரியர் இனத்தைச் சேர்ந்த நாய்க் குட்டி இருப்பதை அறிந்தார்.
இதையடுத்து, நூரி என்று பெயரிடப்பட்ட பெண் நாய்க்குட்டியை வாங்கி வந்த ராகுல் காந்தி, அதை உலக விலங்குகள் தினத்தன்று தனது தாய் சோனியா காந்திக்கு பரிசளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதைக் கண்ட ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் நிர்வாகி ஒருவர் ராகுல் காந்தி மீது உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சியின் தலைவர் முகமது ஃபர்ஹான். இவர்தான் நாய்க் குட்டிக்கு நூரி என்று பெயரிடப்பட்டதற்காக ராகுல் காந்திக்கு எதிராக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து முகமது ஃபர்ஹான் கூறுகையில், “நாயின் பெயர் எனது மத உணர்வுகளை புண்படுத்துகிறது. ஏனெனில், ‘நூரி’ என்ற வார்த்தை இஸ்லாத்துடன் தொடர்புடையது. மேலும், குரானிலும் நூரி என்கிற வார்த்தை குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே, ராகுல் காந்தி நாயின் பெயரை மாற்றுவதோடு, பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றார்.
இதைத் தொடர்ந்து, ஃபர்ஹானின் வழக்கறிஞர் முகமது அலி கூறுகையில், “ஐ.பி.சி. பிரிவு 295 ஏ (மத உணர்வுகளை புண்படுத்துதல்) சட்டப் பிரிவின் கீழ் ராகுல் காந்திக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரி, ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அவிரல் சிங் நீதிமன்றத்தை அணுகினோம்.
நாயின் பெயர் குறித்து பல்வேறு செய்தித்தாள்கள், ராகுல் காந்தியின் முகநூல் பக்கம் மற்றும் யூடியூப் சேனல்களில் இருந்து ஃபர்ஹானுக்கு தெரியவந்தது. எனவே, நாயின் பெயரை மாற்றுவதோடு, பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று செய்தி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்கள் மூலம் ராகுல் காந்திக்கு ஃபர்ஹான் அறிவுறுத்தினார்.
ஆனால், ராகுல் காந்தியிடமிருந்து எவ்வித ரெஸ்பான்ஸும் இல்லை. எனவே, நவம்பர் 8-ம் தேதி ஃபர்ஹானின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. புகாரை விசாரித்த பிறகு, நீதிமன்றம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பலாம்” என்றார். ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஃபர்ஹான் நீதிமன்றத்தை அணுகியதை, உரிமையியல் நீதிமன்றம் அலுவலகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.