எளிதான வாழ்க்கை, எளிதாக வர்த்தகம் புரிவதை மேம்படுத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை எடுப்பதில் பிரதமரின் விரைவு சக்தியின் பங்களிப்பு குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் எடுத்துரைத்தார்.
திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்த ‘பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்ட திறன் மேம்பாட்டிற்கான டிஜிட்டல் கற்றல் வளங்களை மேம்படுத்துதல்’ குறித்த பயிலரங்கை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கிவைத்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பன்முக உள்கட்டமைப்பு மற்றும் தளவாட மேம்பாட்டுக்கு பிரதமரின் விரைவு சக்தி கொள்கைகளை பரவலாக ஏற்றுக் கொள்வதை உறுதி செய்ய தரவு அடிப்படையிலான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு முக்கியம் என்று கூறினார்.
பிரதமரின் விரைவு சக்தி கொள்கைகளின் அடிப்படையில் அரசு அலுவலர்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டைப் பரவலாக்குதல் மற்றும் முறைப்படுத்துதல் ஆகியவற்றில் இந்தப் பயிலரங்கு கவனம் செலுத்தியது.
உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டில் பிரதமரின் விரைவு சக்தி அணுகுமுறையை செயல்படுத்துவது குறித்த துறை சார்ந்த பயிற்சித் தொகுதிகளின் உள்ளடக்கம், கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனம், இந்திய ரயில்வேயின் தேசிய நிறுவனம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 70 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள்; மகாராஷ்டிரா ரிமோட் சென்சிங் அப்ளிகேஷன் மையம், ஹரியானா பொது நிர்வாக நிறுவனம் போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டனர்.