திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதாவின் அமைப்புச்சாரா மக்கள் சேவை பிரிவு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பாரதிய ஜனதாவின் அமைப்புச்சாரா மக்கள் சேவை பிரிவு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், அமைப்புசாரா தொழிலாளர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் நடைபெறும் ஊழல்களை கண்டித்தும், அமைப்புசாரா தொழிலாளர்களின் குழுந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்கிட வேண்டும் என்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் பண்டிகை கால உதவித்தொகையாக ரூபாய் 5000 வழங்கிட வேண்டும் என்றும், (Rapido, Ola, Uber ) ஓட்டுனர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்றும், 60வயதான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ 5000/- பென்ஷன் வழங்கிட வேண்டும் என்று 14 ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளில் சாதனை படைக்காமல் வேதனை மட்டுமே படைக்கிறார்கள், தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையுமே திமுக நிறைவேற்றவில்லை, 99% இதில் நிறைவேற்றியதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார், ஆனால் 99 சதவீதம் எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை மக்கள் சொல்கிறார்கள்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என அவர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
குறிப்பாக மின்சாரத் துறையில் கேங்மான் ஒப்பந்த தொழிலாளர்கள் முதல்வர் ஸ்டாலினின் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள், இதில் சுமார் 1000 பேர் கைதானார்கள்.
தமிழக அரசு இந்த மூன்று ஆண்டு காலகட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளருக்கு எந்த நலத்திட்டத்தையும் அறிவிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.