தமிழக அரசு ஆவின் நிறுவனத்தை ஒழிக்கும் நோக்கத்தில், தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது என்று பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் தெரிவித்தார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கூறியதாவது, “கடந்த ஆட்சியில், ஆவின் நிறுவனம் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும், 40 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தது. தற்போது, 26 இலட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டு, மாட்டுப்பாலில் 8.2 சதவீத இதர சத்துக்கள் மற்றும் 4.3 சதவீத கொழுப்புச் சத்து இருந்ததால், 35 ரூபாய் என அறிவித்தனர். பாலில் சத்து குறைக்கப்பட்டுள்ளதால், லிட்டருக்கு 29 முதல் 32 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைக்கிறது. ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய, 40 ரூபாய் செலவாகிறது. தனியார் நிறுவனங்கள், 36 முதல் 42 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றன.
கேரளாவின் மில்மா நிறுவனம் 46 ரூபாயும், கர்நாடகாவின் நந்தினி நிறுவனம், புதுச்சேரியில் பான்லைட் நிறுவனம் ஆகியவை, 42 ரூபாயும் விலையாகக் கொடுக்கின்றன. இதனால் அண்டை மாநிலங்களுக்கு தினமும், 12 இலட்சம் லிட்டர் பால் செல்கிறது.
குஜராத்தின் அமுல் நிறுவனம் கிருஷ்ணகிரி, வேலூரில் கொள்முதல் நிலையங்கள் நிறுவி உள்ளது. ஆவின் குறைந்த விலையில் கொள்முதல் செய்வதால் பலர் தனியார் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பால் அனுப்புகின்றனர்.
ஆவின் நிறுவனத்திற்குச் சொந்தமான வேலூர், மதுரை, மாதவரம் தீவன தயாரிப்பு நிறுவனங்கள், மூடப்பட்டு விட்டன. ஈரோட்டில் மட்டும், தீவன உற்பத்தி நடக்கிறது. இதனால் பால் உற்பத்தியாளர்கள், கால்நடைகளின் தீவன தேவைக்குத் தனியாரை நம்பும் நிலை உருவாகி உள்ளது.
தமிழகத்தில் தனியார் நிறுவனம் பால் விலை நிர்ணயம் செய்யும் நிலை உருவாகலாம். தற்போது ஆவினில் கொள்முதல் விலையை உயர்த்தாமல், தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக, அரசு செயல்படுகிறது. மற்ற மாநிலங்களில், கொள்முதல் விலை தனியாகவும், ஊக்கத்தொகை தனியாகவும் வழங்கப்படுகிறது. அது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும்” என்று கூறினார்.