“நமோ பாரத்” என்ற பெயரிலான இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு இரயில் சேவையை (ரேபிடக்ஸ்) பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
டெல்லியை மையமாகக் கொண்டு சுற்றியுள்ள நகரங்களை விரைவு இரயில் சேவை (ரேபிடக்ஸ்) மூலம் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த இரயில் சேவைக்கு “நமோ பாரத்” என்று பெயரிடப்பட்டது. இத்திட்டத்தின் முதல்கட்டமாக டெல்லியில் இருந்து காசியாபாத் வழியாக மீரட் வரை செல்லும் இரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. இந்த இரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் சாஹிபாபாத்தில் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, இரயிலில் பயணித்த பிரதமர் மோடி, பள்ளிக் குழந்தைகள் மற்றும் பணியாளர்களுடன் உரையாடினார். இந்த இரயில் முதல்கட்டமாக சாஹிபாபாத், காசியாபாத், குல்தார், துஹாய் மற்றும் துஹாய் டிப்போ ஆகிய 5 ரயில் நிலையங்களை உள்ளடக்கிய டெல்லி-காசியாபாத்-மீரட் இடையே 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு இயக்கப்படும். மொத்தம் 82 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இப்பாதையில், தற்போது பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு இரயில் சேவை முழுமையாகத் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 82 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த தூரத்தை நமோ பாரத் இரயில் 1 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் கடக்கும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த இரயில், மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக் கூடியது. எனினும், தற்போது 160 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் மட்டுமே இயக்கப்படும். இத்திட்டம் நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகத் திகழும் என்று மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருக்கிறார்.
முழுமையாக ஏ.சி. வசதி செய்யப்பட்ட இந்த இரயில், பாதுகாப்பானதாகவும், சொகுசு நிறைந்ததாகவும் இருக்கும். உதாரணமாக, இரயில் பெட்டியில் பயணிகள் படிப்பதற்காக நாளிதழ்கள், புத்தகங்கள் மற்றும் கால்கள் வைக்கும் இடத்தில் மிதியடி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இதில் ஒரு பெட்டி பிரிமியம் பெட்டியாகவும், ஒரு பெட்டி மகளிருக்கானதாகவும் இருக்கும். கடைசி பெட்டியில் வீல் சேர் அல்லது ஸ்டெரெச்சர் மூலம் பயணிகள் ஏறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இத்திட்டம் 30,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.