தமிழ்நாட்டிற்கு 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் மற்றும் 300 ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது. ஆனால், அதை திமுகவினர் எங்கே ஒழித்து மறைத்து வைத்துள்ளார்கள் என தெரியவில்லை என குற்றம் சாட்டினார்.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குஉட்பட்ட பூமார்கெட் பகுதியில் உள்ள பூ விற்பனையாளர்களை பி.எம்.விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் இணைப்பதற்கான முகாமை பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். விழாவில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கோவை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லி புறப்பட்டார். முன்னதாக, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி மக்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.
தமிழக அமைச்சர் சனாதனத்தை ஒழிப்போம் என்று சொன்னதை நிறைவேற்றும் வகையில், இந்து தெய்வங்களின் படங்களை வைத்து ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்று, ஆயுத பூஜைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மருத்துவக் கல்லூரியிலிருந்து ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது. இது இந்துக்களின் மனதை புண்டுபத்தும் செயல். இதை உடனே திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
நாமக்கல்லில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்குக் கலைஞர் பெயர் வைக்கத் தீர்மானம் போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட ராமலிங்கம் பிள்ளையின் பெயர் வைப்பது தான் சாலச் சிறந்தது. சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு தனது இன்னுயிர் நீத்தவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக, 75 -வது அமிர்த பெருவிழா கொண்டாடி, வரும் நேரத்தில், பேருந்து நிலையத்திற்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பெயர் வைப்பது தான் சிறந்ததாக இருக்கும். அதுவே மக்களின் விருப்பமும் கூட.
கோவை குண்டு வெடிப்பில் 70 பேருக்கு மேல் உயிர் தியாகம் செய்துள்ளனர். பல நூறு பேர் காயப்பட்டு இன்றும் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். அவர்களுக்குத் துரோகம் செய்யாமல் தமிழக அரசு சட்டத்திற்கு உட்பட்டு, நீதிமன்றம் கொடுத்த தண்டனையை குறைக்கக் கூடாது.
தமிழ்நாட்டிற்கு, மத்திய மீன்வளத்துறை சார்பில் 1,800 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நலத்திட்டங்களில் பிரதமர் மோடியின் படத்தைப் போடுவதற்கு தயங்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாகவே, தமிழக அரசுக்குக் கொடுக்கப்பட்ட 300 கால்நடை ஆம்புலன்ஸ்-ஐ மறைத்து ஒழித்து வைத்துள்ளனர். இது 100 சதவீதம் மத்திய அரசின் நிதி. இதனால், பிரதமர் மோடியின் படத்தைக் கட்டாயம் போட்டோ ஆகவேண்டும்.
மகளிர் உரிமைத் தொகையை அனைவருக்கும் வழங்குவதாகச் சொல்லிவிட்டு இப்போது திமுகவினருக்கு மட்டுமே வழங்கி வருகின்றனர். இது போன்று திமுகவினர் மட்டுமே அரசின் முழு பலன்களை அனுபவித்து வருகின்றனர் எனக் குற்றம் சாட்டினார்.