கூட்டுறவின் மூலம் செழிப்பு என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் என்சிசிஎஃப் முக்கிய பங்கு வகிக்கிறது எனத் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவன (என்சிசிஎஃப்) இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா,
2027-28 ஆம் ஆண்டிற்குள் ரூ. 50,000 கோடி வணிகத்தை அடைந்து அதன் மூலம் என்சிசிஎஃப் தன்னிறைவு அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார். என்சிசிஎஃப்-பின் மூலதனப் பங்கில் கூட்டுறவு நிறுவனங்களின் விகிதம் அதிகமாக இருப்பதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மற்றும் பிற கூட்டுறவு நிறுவனங்களை, உறுப்பினர்களாக மாற்ற என்சிசிஎஃப் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்த நோக்கத்திற்காக என்சிசிஎஃப், வணிகத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் வணிக அணுகுமுறைகளை தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கூட்டுறவின் மூலம் செழிப்பு என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நிறைவேற்றுவதில் என்சிசிஎஃப் முக்கிய பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், கூட்டுறவு அமைச்சகம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூட்டுறவு நிறுவனங்களின் பங்கை அதிகரிக்கவும் கடந்த 26 மாதங்களில் 52 முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
என்சிசிஎஃப் தன்னிறைவு பெற்ற கூட்டுறவு நிறுவனமாக மாறுவதற்கான செயல்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று கூறினார். அத்தகைய செயல்திட்டத்தை செயல்படுத்துவதில் என்சிசிஎஃப்-க்கு கூட்டுறவு அமைச்சகம் முழு ஆதரவை வழங்கும் என்று தெரிவித்தார்.
வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை வாங்குவதற்கு என்சிசிஎஃப் , தொடக்க வேளாண் கடன் சங்கங்களுடன் (பிஏசிஎஸ்) ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றும், இதன் மூலம் கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய சேமிப்புக் கிடங்குத் திட்டத்தின் கீழ் அவற்றை இருப்பு வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் என்றும் அமைச்சர் ஆலோசனை தெரிவித்தார்.
வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராய்ந்து, அரிசியை கொள்முதல் செய்து தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (என்இசிஎல்) மூலம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
என்சிசிஎஃப் தலைவர் விஷால் சிங், மத்திய உள்துறை அமித் ஷா பரிந்துரைத்த யோசனைகளை செயல்படுத்துவதாக உறுதியளித்தார். இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் ஞானேஷ் குமார் மற்றும் என்சிசிஎஃப் மேலாண்மை இயக்குநர் அனிஸ் ஜோசப் சந்திரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.