ஆபரேஷன் சக்ரா – 2 என்ற பெயரில், 10 மாநிலங்களில் 76 இடங்களில் இணையவழி மோசடிகள் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு இணையவழி நிதி மோசடி குற்றங்கள் தொடர்பாக, ‘ஆபரேஷன் சக்ரா – 1’ என்ற பெயரில், சி.பி.ஐ., அதிகாரிகள், 115 இடங்களில் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, ‘ஆபரேஷன் சக்ரா – 2’ என்ற பெயரில், சி.பி.ஐ. அதிகாரிகள் ஐந்து வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதில், 100 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணய மோசடியும் அடங்கும். கிரிப்டோகரன்சி வழங்குவதாக, நாடு முழுதும், 100 கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றப்பட்டுள்ளது. இதைத் தவிர, அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பிரபலமான நிறுவனங்களின், ‘கால்சென்டர்’ எனப்படும் உதவி மையங்கள் பெயரில் போலி ‘கால்சென்டர்’களை நடத்தி, தவறான தகவல்களைக் கூறி, பல நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் மற்றும் சர்வதேச காவல் அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, இணையவழி குற்றங்களில் தொடர்புடைய ஒன்பது கால்சென்டர்கள் மற்றும் தனிநபர்களுக்குச் சொந்தமான, தமிழகம், கர்நாடகா, பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்கம் உட்பட 10 மாநிலங்களில் உள்ள, 76 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனைகளில், 32 தொலைப்பேசிகள், 48 மடிக்கணினிகள் மற்றும் 33 சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மோசடியில் தொடர்புடைய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.