சத்தீஸ்கர் மாநில முதல்கட்டத் தேர்தலில் 294 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 253 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிகாலம் ஜனவரி 3-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்துக்கு நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மேலும், முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது. அதோடு, முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 13-ம் தேதி தொடங்கி, 20-ம் தேதி நிறைவடையும் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படி, வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது.
முதல்கட்டமாக நடைபெறும் 20 தொகுதிகளுக்கு மொத்தம் 294 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 253 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, அந்தகர் தொகுதியில் 14, பானுபிரதாப்பூரில் 15, கான்கேரில் 10, கேஷ்கலில் 10, கோண்டகானில் 10, நாராயண்பூரில் 9, பஸ்தாரில் 8, ஜக்தல்பூரில் 13, சித்ரகோட்டில் 7 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.
மேலும், தண்டேவாடாவில் 7, பிஜாப்பூரில் 7, கோண்டாவில் 9, கைராகரில் 11, டோங்கர்கரில் 13, ராஜ்நந்த்கானில் 35, டோங்கர்கானில் 15, குஜ்ஜியில் 10, மோஹ்லா-மன்பூரில் 10, கவர்தாவில் 21, பண்டாரியாவில் 16 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு அக்டோபர் 23 கடைசி தேதியாகும்.