போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு, இந்தியா சார்பில் 40 டன் மருத்துவப் பொருட்கள் மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தெரிவித்திருக்கிறார்.
பாலஸ்தீன நாட்டின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி கொடூரமான தாக்குதலை அரங்கேற்றினர். காலை நேரத்தில் இஸ்ரேல் இராணுவம் அசந்திருந்த சமயத்தில் ஒரே நேரத்தில் 7,000 ஏவுகணைகளை செலுத்தி திணறடித்தனர்.
மேலும், நேரடியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி, கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொலை செய்தனர். இத்தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக் கைதியாகவும் பிடித்துச் சென்றனர்.
இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல், காஸா மீது கடுமையான எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. முதலில் விமானப்படை மூலம் வான்வழித் தாக்குதலில் மட்டுமே ஈடுபட்டு வந்த இஸ்ரேல் இராணுவம், கடந்த 6 நாட்களாக தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டிருக்கிறது. எல்லையில் அணிவகுத்து நிற்கும் பீரங்கிகளும், டாங்கிகளும் காஸா மீது குண்டு மழை பொழிந்து வருகின்றன.
மேலும், காஸா நகருக்குள் ஊடுருவி நேரடித் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் நடத்திய இத்தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 4,385 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
அதேசமயம், இஸ்ரேல் இராணுவம் 16-வது நாளாக தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால், காஸாவில் பலி எண்ணிக்கையும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, காஸா நகர மக்கள் குடிக்க தண்ணீர் உட்பட மின்சாரம், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எவ்வித அத்தியாவசிப் பொருட்களும் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். அதேபோல, சிகிச்சைக்கு மருந்துப் பொருட்களும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்கள் அடங்கிய மனிதாபிமான உதவிகளை இந்தியா அனுப்பி இருப்பதாக வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதவில், “பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவியை அனுப்புகிறது! பாலஸ்தீன மக்களுக்கான IAF C-17 விமானம் சுமார் 6.5 டன் மருத்துவ உதவி மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு எகிப்து நாட்டின் எல்-அரிஷ் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது.
அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், கூடாரங்கள், தூங்கும் பைகள், தார்ப்பாய்கள், சானிட்டரி பயன்பாடுகள், தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் போன்ற பிற தேவையான பொருட்களும் இதில் அடங்கும். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் மோதல்களுக்கு மத்தியில் இந்தியா மனிதாபிமான உதவிகளை அனுப்பி இருக்கிறது” என்று தெரிவநித்திருக்கிறார்.