நவராத்திரி விழாவையொட்டி, கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவர்கள் அனைவருமே இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் என்பதுதான் பேரதிர்ச்சி.
தற்போது நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா, பெண்ணின் தெய்வீக வடிவமான துர்கா தேவியை மையமாக வைத்து, 9 நாட்களுக்கு 9 சக்தி வடிவ தெய்வங்களை வைத்து வழிபாடு நடத்துவார்கள். அதேபோல, இவ்விழாவின்போது, துர்கா தேவியை பாடுபொருளாகக் கொண்ட கர்பா பாடல்கள் இசைக்கப்படும்.
இந்த இசைக்கேற்ப ஆண்களும், பெண்களும் பாரம்பரிய உடை அணிந்து விடியும் வரை கர்பா நடனம் ஆடுவார்கள். அந்த வகையில், குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதில் சோகம் என்னவென்றால், உயிரிழந்த 10 பேரும் இளவயது மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என்பதுதான். பரோடாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன், அகமதாபாத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபர் ஆகியோர் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தபோதே திடீரென சுருண்டு விழுந்து இறந்திருக்கிறார்கள். இதேபோல், மாநிலம் முழுவதும் மேலும் 8 உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன.
மேலும், நவராத்திரி தொடங்கி முதல் 6 நாட்களில் கர்பா நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மாரடைப்பு தொடர்பாக 108 ஆம்புலன்சுக்கு 521 அழைப்புகள் வந்திருக்கின்றன. இதையடுத்து, கர்பா நடனம் நடக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று குஜராத் அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
மேலும், கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய கர்பா அமைப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகளில் இளவயதினர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.
















