இந்தியா – கனடா உறவு மிகவும் சிரமமான கட்டத்தில் இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.
காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் இந்தியத் தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக காலிஸ்தானிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதையடுத்து, கடந்த மாதம் கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், ஹர்தீப் சிங் நிஜர் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும், இந்தியத் தூதரை வெளியேறுமாறு உத்தரவிட்டார். பதிலுக்கு இந்தியாவும் கனடா தூதரக உயரதிகாரியை வெளியேறுமாறு உத்தரவிட்டது. இதனால், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதன் பிறகு, கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்த இந்தியா, நாட்டில் உள்ள கனடா நாட்டு தூதர்கள் 41 பேரை திரும்பப் பெறுமாறும் உத்தரவிட்டது. இதையடுத்து, கனடா தனது 41 தூதர்களை இந்தியாவிலிருந்து திரும்பப் பெற்றது. இது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும், வியன்னா ஒப்பந்தத்தை மீறுவதாகவும் கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “தற்போது கனடாவில் நமது மக்கள் பாதுகாப்பாக இல்லை. நமது தூதர்களுக்கு பல வழிகளில் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்தியா- கனடா உறவு மிகவும் சிரமமான கட்டத்தில் இருக்கிறது. இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான தூதரக மோதல்கள் காரணமாக விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
வியன்னா ஒப்பந்தம் மூலம் சமத்துவம் வழங்கப்படுகிறது. இது சர்வதேச விதியாகும். கனேடிய பணியாளர்கள் எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது குறித்து எங்களுக்கு கவலைகள் இருந்ததால் நாங்கள் சமத்துவத்தைப் பயன்படுத்தினோம். வியன்னா ஒப்பந்தத்தின்படி இந்திய தூதர்களுக்கு கனடாவில் பாதுகாப்பு வழங்கப்பட்டால் விசா வழங்கலை மீண்டும் துவங்க விரும்புகிறேன். இது மிக விரைவில் நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கனடாவுக்கு எங்கள் தூதர்கள் வேலைக்குச் செல்வது இனி பாதுகாப்பானது அல்ல” என்றார்.