பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்யா ஆகிய 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் குறித்த வரைவு அறிக்கைகளை பரிசீலித்து ஏற்றுக்கொள்வதற்கு, உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் அக்டோபர் 27-ம் தேதி கூடுகிறது.
பழைய குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய நியாய சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதா 2023 ஆகியவை கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
இம்மசோதாக்களை அறிமுகப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்த மசோதாவில் மொத்தம் 160 பிரிவுகள் மாற்றப்பட்டு, 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 9 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட புதிய சட்டங்கள் அரசியலமைப்பால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதாக இருக்கும்.
அதேபோல, யாரையும் தண்டிப்பதே நோக்கமாக இருக்காது. நீதி வழங்குவதே நோக்கமாக இருக்கும். இந்த செயல்பாட்டில், குற்றத்தைத் தடுக்கும் உணர்வை உருவாக்க வேண்டிய இடத்தில் தண்டனை வழங்கப்படும். மேலும், பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள், அவர்களின் ஆட்சியை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டன. அதோடு, அவர்களின் நோக்கம் தண்டிப்பதே தவிர, நீதி வழங்குவதற்காக அல்ல” என்று குறிப்பிட்டார்.
இந்த மசோதாக்களை பரிசீலித்து ஏற்றுக்கொள்வதற்காக, உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் டெல்லியில் அக்டோபர் 7-ம் தேதி கூடுகிறது.
இந்திய குற்றவியல் சட்டத்திற்கு பதிலாக வரும் பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில் முந்தைய 511 பிரிவுகளுக்குப் பதிலாக 356 பிரிவுகள் இருக்கும். 175 பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டு, 8 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு, 22 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆதாரச் சட்டத்திற்குப் பதிலாக வரும் பாரதிய சாக்ஷ்யா மசோதாவில் முந்தைய 167 பிரிவுகளுக்குப் பதிலாக, தற்போது 170 பிரிவுகள் இருக்கும். 23 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன, ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது, 5 ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.