ஒருபுறம் காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், மறுபுறம் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் 20 நிலைகளை அழித்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.
கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். முதலில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர்கள், பின்னர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நேரடித் தாக்குதலில் ஈட்பட்டதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இதையடுத்து, காஸா மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேலும் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இஸ்ரேலில் 1,400-க்கும் மேற்பட்டோரும், காஸாவில் 4,500-க்கும் மேற்பட்டோரும் பலியாகி இருக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நாள் முதல் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். வடக்குப் பகுதியில் இருந்து காஸா நகரை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஹமாஸ் மீதான தாக்குதலைத் தடுக்கும் நோக்கில், தெற்குப் பகுதியில் இருந்து லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
அதேசமயம், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தற்போது ஹிஸ்புல்லா அமைப்பு போரில் முழுமையாக ஈடுபடுமா என்பதை என்னால் கணிக்க முடியாது. ஒருவேளை ஹிஸ்புல்லா அப்படியொரு முடிவை எடுத்தால், அது வருத்தப்படும். நினைத்துக்கூட பார்க்க முடியாத சக்தியுடன் ஹிஸ்புல்லா அமைப்பை தாக்குவோம். அது ஹிஸ்புல்லா மற்றும் லெபனான் அரசுக்கு அழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்திருந்தார்.
ஆனாலும், ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் திருந்தவில்லை. தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். விளைவு, ஹிஸ்புல்லா இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்கத் தொடங்கியது. அந்த வகையில், ஹிஸ்புல்லா அமைப்பின் 20 நிலைகளை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. இத்தகவலை இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
அதேபோல, இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ் கூறுகையில், “ஹிஸ்புல்லா மிகவும் ஆபத்தான விளையாட்டை விளையாடி பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் லெபனானை போருக்கு இழுத்து வரும் வகையில் ஹிஸ்புல்லா செயல்பட்டு வருகிறது. எல்லைக் கோட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஹிஸ்புல்லாவின் பல்வேறு உட்கட்டமைப்புகளை இஸ்ரேல் இராணுவம் தாக்கி அழித்திருக்கிறது” என்றார்.