பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரிட்டனில் நடந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள், ‛ஜிகாத்’க்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதற்கு அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதற்கு சரியான பாடம் கற்பிக்க இஸ்ரேல் அசுரத் தாக்குதலை நடத்தி வருகிறது. 18-வது நாளாக நடந்து வரும் இப்போரில் இஸ்ரேலியர்களின் இறப்பைவிட, பாலஸ்தீனியர்களின் இறப்பு 4 மடங்கு அதிகமாக இருக்கிறது.
இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள அத்தனை உரிமையும் இருக்கிறது என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதேபோல, காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பிரிட்டன் நாட்டில் பெல்பாஸ்ட், பிர்மிங்காம், கார்டிப் உள்ளிட்ட நகரங்களில் இஸ்லாமியர்கள் பேரணி நடத்தினர். இப்பேரணியில் பங்கேற்றவர்கள், ‘ஜிகாத்’க்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதுகுறித்த வீடியோ அந்நாட்டு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து, ஜிகாத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதற்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வார இறுதியில் பிரிட்டன் நகர வீதிகளில் வெறுப்புணர்வை பார்க்க முடிந்தது. பேரணியில் ஜிகாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது யூதர்களுக்கு மட்டும் ஏற்பட்ட அச்சுறுத்தல் அல்ல.
பிரிட்டனின் ஜனநாயக மாண்புகளுக்கும் சேர்த்து ஏற்பட்ட அச்சுறுத்தலாகும். நமது நாட்டில் யூதர்களுக்கு எதிரான மிரட்டலை சகித்துக் கொள்ள முடியாது. பிரிவினைவாதம் தலைதூக்காமல் இருக்க காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இப்பேரணியின்போது சீர்குலைவு மற்றும் சில வெறுக்கத்தக்க பேச்சுகள் இருந்தன. பேரணியின்போது ஏற்பட்ட மோதலில் 5 போலீஸார் லேசான காயமடைந்தனர். ஜிகாத்க்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வீடியோக்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.