சென்னையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தினசரி குடிநீர் தேவையாக, 100 கோடி லிட்டர் குடிநீரை, சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி வருகிறது.
சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் நீரை, பொதுமக்கள் சமையல் மற்றும் குளியலுக்கும், நிலத்தடி நீரை துணி துவைத்தல் உள்ளிட்டவற்றிற்கும் பயன்படுத்துகின்றனர். மேலும், குடிநீர் தேவைக்காக கேன் வாட்டரை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், பெரும்பாலான மக்கள், குடிநீர் வாரியம் வழங்கும் நீரையே அனைத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை குடிநீர் வாரியம் வழங்கும் நீர், பயன்படுத்த முடியாத அளவுக்கு துர்நாற்றத்துடனும், நிறம் மாறியும் வருவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு காரணம், பெரும்பாலான இடங்களில், குடிநீர் குழாய் பக்கத்திலேயே கழிவுநீர் குழாய் உள்ளது. இதனால், பல வகையான உடல் உபாதைகள் ஏற்பட்டு, மர்ம காய்ச்சல் பரவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள இடங்களில், மழைநீர் வடிகால், மெட்ரோ பணிகள்,பாதாள சாக்கடை பணிகளுக்காக பள்ளம் தோண்டப்படுகின்றன. அப்போது, கவனமின்றி செயல்படுவதால், குடிநீர் குழாயைச் சேதப்படுத்துகின்றன. அவ்வாறு சேதப்படுத்தப்படும் குடிநீர் குழாய் முறையாக சீரமைக்கப்படாமல், அப்படியே மூடப்படுகின்றன.
இதன் காரணமாக, குடிநீருடன் கழிவுநீரும் கலக்கிறது. இதனால், அந்த தண்ணீரைக் குடிக்கும் மக்களுக்கு வயிற்று வலி, வயிற்று போக்கு, வாந்தி, டைபாய்டு, சளி, தொண்டை வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.