ஹமாஸ் தாக்குதலில் 30 பிரெஞ்ச் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, ஹமாஸ் எங்களுக்கும் எதிரிதான் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் கூறியிருக்கிறார்.
இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 18 நாட்களாகப் போர் நடந்து வருகிறது. இப்போர் தொடங்கிய பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மற்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே ஆகியோர் இஸ்ரேலுக்குச் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்து விட்டு வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மெக்ரான், இன்று இஸ்ரேலுக்குச் சென்று, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஹமாஸ் இஸ்ரேல் மீது தொடுத்தது 2001 செப்டம்பர் 11-ம் தேதிக்குப் பிறகு உலகம் அறிந்த மிக மோசமான தீவிரவாதத் தாக்குதலாகும். இது யூத விரோத வன்முறையின் உச்சமாகும். நடந்த அனைத்து பயங்கரங்களையும் விவரிக்க இயலாது.
ஆனால், அன்னே ஃபிராங்கைப் போலவே, இந்த யூதக் குழந்தைகளும் மேற்கண்ட அரக்கர்களிடமிருந்து தப்பிக்க அறைகளில் ஒளிந்து கொண்டனர். ஆனாலும், அவர்களை கண்டுபிடித்து வெட்டிக் கொன்றனர். மேலும், பாபி யாரைப் போலவே, யூதர்களும் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்குக் கொல்லப்பட்டனர். ஹமாஸ் தீவிரவாதிகள், குழந்தைகளை உயிருடன் எரித்தார்கள். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.
மேலும், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றிருக்கிறார்கள். காட்டுமிராண்டித்தனத்திற்கும் நாகரீகத்திற்கும் இடையிலான போரில் நாங்கள் இருக்கிறோம். ஹமாஸின் நடவடிக்கைகள் யூதர்களுக்கு மட்டுமின்றி மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் உலக நாடுகள் முழுவதுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஹமாஸ் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்.
காஸா நகரில் ஹமாஸின் உட்கட்டமைப்பு, அரசியல் பின்புலம் உட்பட அனைத்தையும் அழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உறுதிபூண்டுள்ளோம். அதேபோல, பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றவர்களையும் மீட்போம். அதேசமயம், பாலஸ்தீனிய மக்களுக்கு தீங்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம். இஸ்ரேல் இராணுவம் நிச்சயம் ஹமாஸை அழித்துவிடும். போர் முடிந்ததும் யாரும் ஹமாஸின் கொடுங்கோன்மையின் கீழ் வாழ வேண்டியதில்லை” என்று கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், “இஸ்ரேல்-பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் பயங்கரவாதம் பொது எதிரி. மேலும், இஸ்ரேலுக்கு பிரான்ஸ் என்றும் உறுதுணையாக இருக்கும். அதேபோல, ஹமாஸ் தாக்குதலில் 30 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எனவே, ஹமாஸ் எங்களுக்கும் எதிரிதான்” என்று கூறியிருக்கிறார்.
இஸ்ரேல் பிரதமரை சந்தித்துப் பேசிய மெக்ரான், பின்னர் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பிரான்ஸ் மற்றும் பிரெஞ்சு இஸ்ரேல் பிரஜைகளின் குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்துப் பேசுவதற்காக அந்நாட்டுக்குச் சென்றார். இதன் மூலம், போருக்கு மத்தியில் பாலஸ்தீனிய அதிபரின் மாளிகைக்குச் செல்லும் முதல் உலகத் தலைவர் மெக்ரான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.