டெல்லியில் நடந்த தசரா விழாவில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “இண்டி” ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு குறித்து விமர்சித்தபோது, ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி நடக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
தலைநகர் டெல்லியில் துவாரகா செக்டார் 10-ல் உள்ள ராம் லீலா மைதானத்தில் விஜய தசமி மற்றும் தசரா விழா நடைபெற்றது. ஸ்ரீராம் லீலா சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில், தலைமை விருந்தினராக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது, நீல நிறத்தில் கட்டம் போட்ட காவிக்கலர் சட்டை அணிந்திருந்தார். அதேபோல, காவி நிற தலைப்பாகை அணிந்திருந்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க. தலைவர் பர்வேஷ் வர்மா கூறுகையில், “பிரதமர் மோடி இவ்விழாவுக்கு வருகை தந்திருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கெனவே, கடந்த 2019-ம் ஆண்டு நடந்த விழாவில் பங்கேற்றார். இந்த முறையும் எங்களின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விழாவில், ராவணனின் உருவ பொம்மையையும் பிரதமர் எரிப்பார்” என்றார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நவராத்திரி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தீமைக்கு எதிரான நன்மையின் அடையாளமாக இப்பண்டிகை திகழ்கிறது. விஜயதசமி நாளான இன்று நம் நாட்டில் ஆயுதங்களை வைத்து பூஜை செய்து வணங்குவது எந்த நிலத்தையும் ஆள்வதற்கு அல்ல, நமது சொந்த நிலத்தை காக்கவே. இது ஒரு சாஸ்திர பூஜை.
நிலவில் கால்பதித்து 2 மாதங்களான நிலையில், அதனுடன் இன்று நாம் விஜயதசமியை கொண்டாடுகிறோம். கீதையின் அறிவையும் நாம் அறிவோம். அதேசமயம், ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் தேஜாஸ் ஆகியவற்றை உருவாக்கும் திறனும் நம்மிடம் இருக்கிறது. இன்றைய தினம் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்படுவதைக் காணும் அதிர்ஷ்டசாலிகள் நாம். அடுத்த ராமநவமியன்று, அயோத்தியில் ராம்லாலா கோவிலில் எதிரொலிக்கும் ஒவ்வொரு குறிப்பும் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
ராமர் கோவிலில் வசிக்க, ராமருக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. ராமரின் கண்ணியம் நாட்டு மக்களுக்குத் தெரியும். அதேபோல, நாட்டின் எல்லையை எப்படி பாதுகாப்பது என்பதும் தெரியும். ஜாதியின் பெயரால் இங்கு ஒரு கூட்டம் மக்களை பிரித்தாள முயற்சி செய்கிறது. விரைவில் இந்தியா உலகிலேயே மிகவும் வலுவான ஜனநாயக நாடாக மாறும்” என்றார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.