தமிழக அரசின் சரியான திட்டமிடல் இன்மையால், சுற்றுலாத் தலங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டிக்கு, தமிழக மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வருகின்றனர்.
அந்த வகையில், தொடர் விடுமுறையையொட்டி, தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீலகிரியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க குடும்பத்துடன் திரண்டு வந்து உள்ளனர். அவர்கள் ஊட்டியில் நிலவும் குளு குளு சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு, கோத்தகிரி, நீர்வீழ்ச்சி, குன்னூர், கூடலூர் தவலைமலை, முதுமலை புலிகள் சரணாலயம் என அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரிப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தமிழக அரசின் சரியான திட்டமிடல் இன்மையை இந்த போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம் என சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.