ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் கடந்த 20-ம் தேதி பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததாக பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தலை நடைபெறுக்கிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், கடந்த 20-ம் தேதி தௌசாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “சமீபத்தில் தொலைக்காட்சியில் ஏதோ பார்த்தேன். அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. பிரதமர் மோடி தேவநாராயண் கோவிலுக்குச் சென்று நன்கொடை பெட்டியில் ஒரு கவரை போட்டார். அதில் என்ன இருக்கிறது என்று மக்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அதைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்து 21 ரூபாய் நோட்டு வெளியே வந்தது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரியங்கா காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், “அக்டோபர் 20-ம் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் மற்றும் ஆர்.பி. சட்டத்தை மீறி இருக்கிறார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணைய உறுப்பினர்களை இன்று சந்தித்தோம். பிரியங்கா காந்தி வத்ரா மாதிரி நடத்தை விதிகளுக்கு மேலானவரா என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்க விரும்புகிறோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி இருக்கிறோம்” என்றார்.
அதேபோல, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், “பிரியங்கா காந்தி வத்ரா ஏற்கெனவே பொதுக் களத்தில் போலியானதாக அறிவிக்கப்பட்ட ஒரு செய்தியை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்து, அதை மீண்டும் வலியுறுத்தி ஒரு பிரச்சனையை உருவாக்க முயன்றார். இல்லாத ஒன்றை கிளப்ப முயற்சிக்கிறார்.
மாதிரி நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் நேரத்தில், அவர் மத உணர்வை அரசியல் உரையாடலில் வைக்கிறார். ஆகவே, தேர்தல் ஆணையம் இதை மிகவும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். மேலும், நோட்டீஸ் வழங்கினாலும் சரி அல்லது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதாக இருந்தாலும் சரி, அது தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பொறுத்தது” என்றார்.