பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்ற பெயரை “பாரதம்” என்று மாற்ற வேண்டும் என்று என்.சி.இ.ஆர்.டி. குழு பரிந்துரைக்கும் நிலையில், இது எங்களுக்கு பெருமைக்குரிய விஷயம் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியிருக்கிறார்.
உத்தரகண்ட் மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், “உத்தரகண்ட்டில் முதலீடு செய்யுங்கள்” என்னும் திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கி இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்குச் சென்று, தங்களது மாநிலத்தில் முதலீடு செய்யும்படி அங்குள்ள தொழிலதிபர்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
அந்த வகையில், உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, நேற்று மாலை சென்னைக்கு வந்தார். அவரை தமிழக பா.ஜ.க.வினர் வரவேற்றனர். தொடர்ந்து நடந்த இரவு விருந்தின்போது, பல்வேறு தொழிலதிபர்கள் முதல்வர் தாமியை சந்தித்தனர். அப்போது, உத்தரகண்ட்டில் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
தொடர்ந்து, முதல்வர் தாமி இன்று காலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தாமி, “உத்தரகண்ட் மாநிலத்திற்கு முதலீடுகளை கொண்டு வருவதற்காக சென்னை வந்திருக்கிறேன். மாநிலத்தில் தொழில்களை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு புதிய கொள்கைகளை உருவாக்கி இருக்கிறது.
மேலும், தொழில்துறையுடன் தொடர்புடைய நபர்களின் ஆலோசனைகளை உள்ளடக்கிய கொள்கைகளிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. உத்தரகண்ட் மாநிலத்தில் தொழிற்சாலைகளுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. அதற்கேற்றார்போல, மாநிலத்தில் சாலை, இரயில், ரோப்வே மற்றும் விமான இணைப்புகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன.
உத்தரகண்ட் மாநில அரசு இதேபோன்ற உத்தரகண்ட்டில் முதலீடு செய்யுங்கள் நிகழ்ச்சியை, டெல்லி, லண்டன், பர்மிங்காம், அபுதாபி மற்றும் துபாயிலும் ஏற்பாடு செய்திருந்தது. தற்போது சென்னைக்கு வந்திருக்கிறோம். இங்கும் தொழிலதிபர்களை சந்தித்தோம். அவர்கள்உத்தரகண்ட் வருவது பற்றி பேசினார்கள். உத்தரகண்ட் உலக முதலீட்டாளர் மாநாட்டின் கீழ் இதுவரை 55,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருகின்றன” என்றார்.
தொடர்ந்து அவரிடம் சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்களில் இந்தியா என்பதற்கு பதில் பாரதம் என்று மாற்றம் செய்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் தாமி, “நாங்கள் சிறுவயதில் இருந்தே ‘பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்’ போன்ற முழக்கங்களைக் கேட்டும், எழுப்பியும் வருகிறோம். ஆகவே, இது எங்களுக்குப் பெருமைக்குரிய விஷயம்தான்” என்றார்.
நிகழ்ச்சியின்போது, மத்திய அமைச்சர் சத்பால் மகராஜ், சவுரப் பகுகுணா, செயலாளர் ஆர்.மீனாட்சி சுந்தரம், சச்சின் குர்வே மற்றும் ஆர்.ராஜேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.