மிசோராம் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 174 மொத்த வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் ஆன்ட்ரூ லால்ரெம்கிமா பச்சோவ்தான் நம்பர் 1 என்பது குறிப்பிடத்தக்கது.
மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு மொத்தம் 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேற்கண்ட வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருக்கும் பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில், 112 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.
அதாவது, மொத்த வேட்பாளர்களில் 64.4 சதவீத வேட்பாளர்கள், தங்களுக்கு 1 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் சொத்து இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதில் ஹெலைட் என்னவென்றால், கோடீஸ்வர வேட்பாளர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ஆம் ஆத்மி கட்சியின் மிசோரம் மாநிலத் தலைவரான ஆண்ட்ரூ லால்ரெம்கிமா பச்சோவ்தான். இவரது சொத்து மதிப்பு 68.93 கோடி. இவர், அய்ஸ்வால் வடக்கு 3-வது தொகுதியில் போட்டியிடுகிறார்.
அடுத்ததாக, செர்ச்சிப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வன்லத்லுங்கா 55.6 கோடி ரூபாய் சொத்துகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். சம்பாய் வடக்குத் தொகுதியில் மிசோரம் மக்கள் இயக்க வேட்பாளராக போட்டியிடும் ஜின்ஜாலா 36.9 கோடி ரூபாய் சொத்துகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். அதேபோல, இத்தேர்தலில் போட்டியிடும் 16 பெண் வேட்பாளர்களில் காங்கிரஸ் கட்சியின் மெரியம் எல்.ஹிராங்சால்தான் மிகவும் பணக்கார வேட்பாளர். லுங்லே தெற்கு தொகுதியில் போட்டியிடும் இவரது சொத்து மதிப்பு 18.63 கோடி ரூபாய்.
மேற்கண்ட பணக்கார வேட்பாளர்களுக்கு மத்தியில், செர்ச்சிப் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராம்லன் எடேனாதான் மிகவும் ஏழை வேட்பாளர். இவர் தனக்கு ஒரே ஒரு அசையும் சொத்து மட்டும் இருப்பதாகவும், அதன் மதிப்பு 1,500 ரூபாய் என்றும் தெரிவித்திருக்கிறார். அதேபோல, லாங்த்லாய் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஜேபி ருலசிங்கா தமது வேட்புமனுவில் தனக்கு 90.32 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தவறுதலாக குறிப்பிட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறார்.
அதேசமயம், 2018-ம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் லால்ரிங்க செய்லோ தனக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அவரது சொத்து மதிப்பு வெறும் 26.24 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருக்கிறார்.