இரு நாள் பயணமாக சென்னை வந்த குடியரசு தலைவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை (27.11.2023) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருந்து இந்திய விமான படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று சென்னை வந்தார்.
அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனையடுத்து அவர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். இரவு அங்கு ஓய்வெடுக்கும் திரௌபதி முர்மு, நாளை இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
குடியரசுத்தலைவரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.