ஹமாஸ் தீவிரவாதிகளின் சுயநலத்தால், காஸா நகரமே உருக்குலைந்து வருகிறது. இஸ்ரேல் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து வருவதால் காஸா நகரிலுள்ள கட்டடங்கள் தரைமட்டமாகி வருகின்றன.
கடந்த 7-ம் தேதி காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் பலியான நிலையில், இஸ்ரேல் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் திருப்பித் தாக்க முடியாத அளவுக்கு அசுரத் தாக்குதல் நடத்தி வருகிறது. விமானப்படை மூலம் ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து குண்டு மழை பொழிந்து வருகிறது.
இஸ்ரேலின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், முக்கிய தீவிரவாத முகாம்கள், ஹமாஸ் தலைவர்களின் வீடுகள், விமானப்படைத் தளம், கப்பற்படைத் தளம் என குறிவைத்துத் தாக்கியதில், 750-க்கும் மேற்பட்ட தீவிரவாத இலக்குகள் தரைமட்டமாகி இருக்கிறது. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் முக்கியத் தளபதிகள் உட்பட 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
22-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல் வான்வெளித் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. வானில் இருந்து தீப்பந்துகள் விழுவது போல இஸ்ரேல் நாட்டின் குண்டுகள் விழுகின்றன. இத்தாக்குதலில் இதில், ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகள் மட்டுமன்றி, பொதுமக்களின் வீடுகளும் தரைமட்டமாகி வருகின்றன. இதில், ஏராளமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டனர். இதனால், காஸா நகரமே உருக்குலைந்து வருகிறது.
மேலும், எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 8,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், 20,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், காஸா நகரின் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், தரை வழித் தாக்குதலையும் தொடங்கி இருக்கிறது. காஸா எல்லையில் முற்றுகையிட்டிருக்கும் இஸ்ரேலின் தரைப்படை பீரங்கிகள், புறநகர் பகுதிக்குள் ஊடுருவி ஹமாஸ் அமைப்புகளின் இலக்குகளை குறிவைத்து தாக்கி விட்டு, மீண்டும் தங்களது நிலைக்கே திரும்பிவிடுகின்றனர். அந்த வகையில், நேற்று காஸா நகருக்குள் ஊடுருவிய இஸ்ரேல் இராணுவத்தினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது.
இதை ஹமாஸ் தீவிரவாதிகளும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். எல்லைக்கு அருகில் உள்ள பகுதியில் இஸ்ரேல் வீரர்களுடன், தங்கள் போராளிகள் மோதலில் ஈடுபட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இதனால் போர் மேலும் தீவிரமடையும் என்றும், காஸா நகரம் முற்றிலுமாக தரைமட்டமாகும் என்று அஞ்சப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, காஸாவில் தொலைத் தொடர்புத் துறை சேவைகள் அனைத்தும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இணையதளம் மற்றும் செல்போன் சேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, காஸாவில் உள்ள பொதுமக்கள் வெளியுலகத் தொடர்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். ஐ.நா. மற்றும் செஞ்சிலுவைச் சங்கமும் தங்களது பணியாளர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவித்திருக்கின்றன. இதனால், காஸாவில் என்ன நடக்கிறது என்பதே யாருக்கும் தெரியவில்லை.