இன்று நடந்த ரோஜ்கர் மேளாவில், காணொலிக் காட்சி வாயிலாக 50,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இது தீபாவளி பரிசு என்று கூறியிருக்கிறார்.
நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும், நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ரோஜ்கர் மேளா என்கிற வேலைவாய்ப்பு முகாமை கடந்த ஆண்டு தொடங்கினார். அந்த வகையில், இதுவரை பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கானோருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இம்முகாம்களின் மூலம் பணி பெறுபவர்கள், மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுத் துறைகளில் பணியமர்த்தப்பட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று நாடு முழுவதும் 37 இடங்களில் ரோஜ்கர் மேளா நடைபெற்றது. இம்முகாமில் காணொலிக் காட்சி வாயிலாக 50,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரோஜ்கர் மேளா தொடங்கப்பட்டது. இந்த ரோஜ்கர் மேளாவின் கீழ் இதுவரை லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று 50,000 பேருக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் இவர்களுக்கு வேலை கிடைத்திருப்பதால் இவர்களது குடும்பத்தினருக்கு தீபாவளி பண்டிகைக்கு குறைவிருக்காது. அதேசமயம், இது அவர்களுக்கான தீபாவளி பரிசாகும். காதியின் விற்பனை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 30,000 கோடியாக இருந்த நிலையில், தற்போது 1.25 லட்சம் கோடியைத் தாண்டி இருக்கிறது. இதன் மூலம், காதியின் இழந்த பெருமையை எங்கள் அரசு மீட்டெடுத்துள்ளது” என்றார்.
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள், இரயில்வே அமைச்சகம், தபால் துறை, உள்துறை அமைச்சகம், வருவாய்த் துறை, உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட துறைகளில் அரசுப் பணிகளில் சேருவார்கள்.