குஜராத் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் பலன்பூர் ஜெகத்னகா பகுதியைச் சேர்ந்தவர் கனுபாய் சோலங்கி. இவரது மனைவி ஷோபாபென். மகன் மணீஷ் சோலங்கி. இவரது மனைவி ரீட்டா. இத்தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் மற்றும் 10 , 13 வயதில் 2 மகள்கள் இருந்தனர். மணீஷ் சோலங்கி பர்னிச்சர்கள் தயாரித்து விற்பனை செய்து வந்திருக்கிறார். இவரிடம் 35 தச்சர்களும் மற்றும் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மரக்கடையில் இருந்து ஒருவர் மணீஷ் சோலங்கியை பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றிருக்கிறார். ஆனால், மணீஷ் தொடர்ந்து தொலைபேசி அழைப்பை ஏற்காததால், அந்த நபர் நேராக வீட்டிற்கு வந்திருக்கிறார். நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் யாரும் திறக்காததால், சந்தேகமடைந்த அவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, காவல்துறையினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குடும்பமே இறந்து கிடந்தது தெரியவந்தது. மணீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்துகொண்டிருக்க, மற்றவர்கள் உயிரிழந்த நிலையில் கீழே இறந்து கிடந்தனர். உயிரிழந்த 7 பேரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனையில் மணீஷ் தந்தை, தாய், மனைவி 3 பேரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டதும், மற்ற 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், காவல்துறை அந்த வீட்டிலிருந்து தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றி இருக்கிறது. அக்கடிதத்தில், “வறுமை, பொருளாதார நெருக்கடியால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தோம்” என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எனினும், இதுகுறித்து காவல்துறையினர் தீர விசாரித்து வருகின்றனர். இதுகுறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “மணீஷ் மட்டுமே தற்கொலை செய்துகொண்டார் என்றே எங்களுக்குத் தகவல் வந்தது. இங்கு வந்த பிறகதான் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தற்கொலைக் குறிப்பை ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். முழுமையான விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும்” என்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.