மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் எழுத்தாளர்கள் சிவசங்கரி மற்றும் ஏ.கே.பெருமாள் ஆகியோரை பாராட்டி இருக்கிறார்.
பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, 2014 அக்டோபர் மாதம் முதல் “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி இன்று தனது 106-வது “மன் கி பாத்” நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது, “இந்த மாதம் காதி விற்பனை கடந்த கால சாதனைகளை முறியடித்திருக்கிறது. கடந்த காலங்களில் 30,000 கோடிக்கு மட்டுமே விற்பனையான காதிப் பொருட்கள், இந்த மாதம் 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது. விவசாயிகள், குடிசைத் தொழில் செய்வோர், கைவினைக் கலைஞர்கள் ஆகியோர் இந்த விற்பனையால் பயனடைந்திருக்கிறார்கள்.
சுற்றுலா செல்லும்போதும், ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளும்போதும் அப்பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குங்கள். இதற்கென உங்களது பட்ஜெட்டில் நிதி ஒதுக்குங்கள். மேலும், பண்டிகை காலத்தில் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி, இலக்கியம் மூலம் ‛knit india’ என்ற இயக்கத்தை உருவாக்கி இருக்கிறார். இது இலக்கியத்தின் மூலம் நாட்டை இணைப்பதாகும். இதற்காக அவர், கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். மேலும், 18 இந்திய மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை சிவசங்கரி மொழி பெயர்த்திருக்கிறார்.
இதற்காக, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், இம்பாலில் இருந்து ஜெய்சால்மர் வரையிலும் பலமுறை நாடு முழுவதும் பயணம் செய்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுடன் கலந்துரையாடி இருக்கிறார். அதோடு, சிவசங்கரி பல்வேறு இடங்களுக்குச் சென்று பயணத் தகவல்களை வெளியிட்டார்.
இது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் உள்ளது. இத்திட்டத்தில் 4 பெரிய தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, கன்னியாகுமரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.கே.பெருமாளின் பணிகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் கதை சொல்லும் பாரம்பரியத்தை அவர் பாதுகாத்து வருகிறார். இந்தப் பணியில் 40 ஆண்டுகளாக அவர் பணியாற்றி வருகிறார். இதுவரை அவர் 100 புத்தகங்களை இருக்கிறார். சிவசங்கரி, ஏ.கே.பெருமாளின் முயற்சிகள் அனைவராலும் பாராட்டத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.