விராட் கோலி, ரோஹித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய மூன்று வீரர்களுமே சிறந்த வீரர்கள் – பாபர் அசாம்.
சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதம் பெருமளவில் நடைபெற்று வருகிறது. தரவரிசை பட்டியலில் தற்போது பாபர் அசாம் முதலிடத்தில் இருந்தாலும் அவர் பாகிஸ்தான் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே உள்ளது.
விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்கு வகித்துவரும் நிலையில் பாபர் அசாம் அது போன்ற ஒரு ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்துவதில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.
மேலும் நெருக்கடியான கட்டத்தில் பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் தான் சிறப்பாக விளையாடுகிறார் என்றும் பாபர் அஸாம் தடுமாறுகிறார் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பாபர் அசாம் அளித்துள்ள பேட்டி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்து பேசிய அவர், “தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் பிடித்த வீரர்கள் என்றால் விராட் கோலி தான். ரோகித் சர்மா, வில்லியம்சன் அவர்கள் தற்போது உலக கிரிக்கெட்டில் தலை சிறந்த வீரர்களாக திகழ்கிறார்கள். இந்த மூன்று வீரர்களும் கால சூழலை புரிந்துக் கொண்டு விளையாடுகிறார்கள். அதனால் தான் இந்த மூன்று வீரர்களுமே பேட்டிங்கில் சிறந்து விளங்குகிறார்கள்.
இதனாலேயே எனக்கு இந்த மூன்று வீரர்களையும் மிகவும் பிடிக்கும். விராட் கோலி, ரோஹித் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய மூன்று வீரர்களுமே சிறந்த விஷயம் ஒன்று இருக்கிறது. அதாவது அணி எப்போதெல்லாம் நெருக்கடியான சூழலில் சிக்கிக் கொள்கிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் கடினமான பந்துவீச்சை எதிர்கொண்டு ரன்களை சேர்த்து அணியை காப்பாற்றி விடுவார்கள். இந்த ஒரு நல்ல விஷயத்தை நான் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்” என்று பாபர் அசாம் கூறியுள்ளார்.