கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்தது தொடர்பாக, காவல்துறையில் சரணடைந்திருக்கும் நபர், நான்தான் குண்டு வைத்தேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் கொச்சியின் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில், யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாடு கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. நிறைவு நாளான இன்று காலை 9 மணியளவில் பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, தீடீரென 3 இடங்களில் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், குழந்தைகள் உட்பட 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 7 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
இச்சம்பவம் தொடர்பாக மாநில காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், மத்திய புலனாய்வுப் பிரிவான தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக, ஒரு நபரை பிடித்து விசாரித்து வரும் மாநில காவல்துறையினர், வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தவுடன் அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற கார் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக விவாதிக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டி இருக்கிறார். டெல்லி சென்றிருக்கும் முதல்வர் பினராயி விஜயன், குண்டு வெடிப்பு குறித்த தகவல் அறிந்ததும், கேரளாவுக்கு புறப்பட்டிருக்கிறார். கேரளா வந்தவுடன் குண்டு வெடிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிவார் என்று கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடித்தது டிபன் பாக்ஸ் வகை வெடிகுண்டு என்பதை காவல்துறையினர் கண்டறிந்திருக்கிறார்கள். மேலும், குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதுதவிர, தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்தான், நான்தான் வெடிகுண்டு வைத்தேன் என்று சொல்லி திருச்சூரில் உள்ள கொடக்கரா காவல் நிலையில் ஒருவர் சரணடைந்திருக்கிறார். அவர், கொச்சியைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் டொமினிக் மார்ட்டின் என்பதும், அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்திருக்கிறது. எனினும், உண்மையிலேயே அவர்தான் வெடிகுண்டு வைத்தாரா அல்லது யாரையாவது காப்பாற்ற அப்படிச் சொல்கிறாரா என்பது குறித்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேசமயம், குண்டு வெடிப்பு தொடர்பாக மார்டின் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் பேசும் மார்டின், “குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு நான்தான் பொறுப்பு. நான் 16 வருடங்களாக யெகோவா சபையின் விசுவாசியாக இருந்தேன். சபையின் செயல்பாடுகள் பிடிக்காததால் கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்குச் செல்வதில்லை. சபையின் நிர்வாகிகள் கூறும் கருத்து விரும்பத்தகாத வகையில் இருந்தது. சபையினர் தேச துரோக கருத்துகளைக் கூறி வந்தனர். அதை திருத்த முயற்சித்தும் பயனில்லை. அதனால் இவ்வாறு செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.