கேரளாவில் 3 பேர் உயிரிழப்புக்குக் காரணமான குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள களமச்சேரியில், யெகோவாவின் சாட்சிகள் சபை எனும் கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த 27-ம் தேதி முதல் மாநாடு நடத்தி வந்தனர். இதன் நிறைவு நாளான நேற்று சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 3 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இதில், சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்களில் மற்றொரு பெண்ணும், ஒரு சிறுமியும் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு அதே சமூகத்தைச் சேர்ந்த டொமினிக் மார்டின் என்பவர் பொறுப்பேற்றிருக்கிறார்.
எனினும், இது தீவிரவாத சதியா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில், தீவிரவாதிகள் பயன்படுத்தும் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு உட்பட பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கேரள குண்டு வெடிப்புக்கு ஹமாஸ் ஆதரவுதான் காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியிருந்தார். காரணம், இச்சம்பவம் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்புதான், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கேரளாவில் பேரணி நடந்தது. இப்பேரணியில் ஹமாஸ் மாஜி தலைவர் மஷால் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கேரளாவில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். முன்னதாக, காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த களமச்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.