மத்திய அரசின் திட்டங்களை கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டி இருக்கிறார்.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய அமைப்புகள் பேரணி நடத்தின. இப்பேரணியில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் காலித் மஷால் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது, இந்து மற்றும் யூத மதங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய மஷால், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும்படி பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள களமச்சேரி என்கிற இடத்தில், யெகோவாவின் சாட்சிகள் என்கிற கிறிஸ்தவ அமைப்பு மாநாடு நடத்தியது. இதன் நிறைவு நாள் பிரார்த்தனையின்போது, 3 இடங்களில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 2 பெண்கள், 1 சிறுமி என 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 45-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், கேரளாவில் தீவிரவாத சக்திகள் தலைதூக்கி வருவதாகக் குற்றம்சாட்டி, அம்மாநில தலைமைச் செயலகத்தை பா.ஜ.க.வினர் இன்று முற்றுகையிட்டனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பேசுகையில், “ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 70 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார். ஆனால், பினராயி விஜயன் அரசால் 12 லட்சம் குழாய் இணைப்புகளை மட்டுமே வழங்க முடிந்தது.
அதேபோல, ஆறு வழிச்சாலை அமைக்க உள்ள என்.ஹெச்.-66 திட்டத்திற்கு பிரதமர் மோடி அனுமதி அளித்திருக்கிறார். ஆனால், தற்போதைய அரசு நிலம் தராமல் தடைகளை ஏற்படுத்த முயல்கிறது. மது அருந்துவதை அதிகரிப்பதில் கேரள அரசு ஈடுபட்டிருக்கிறது. சட்டவிரோத மது விநியோகத்தை தடுக்க இங்கு வந்திருக்கிறோம். மேலும், மத்திய அரசின் திட்டங்களை கேரள அரசு சீர்குலைக்க முயற்சிக்கிறது.
கேரளாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் ஹமாஸ் தலைவர் ஒருவர் உரையாற்றிய போது, இடதுசாரி அரசு அமைதியாக வேடிக்கை பார்த்தது. நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தபோதும் அமைதி காக்கிறது. பா.ஜ.க. சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நாங்கள் அனைவருக்கும் சமம். அதேநேரம், தேசம் என்ற போர்வையில் நாட்டைப் பிரிக்க முயற்சிக்கும் தேசவிரோத சக்திகளுடன் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்.
பினராயி விஜயனின் அரசாங்கத்தில் உள்ள தவறான நிர்வாகப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், தற்போதைய நிர்வாகத்தில் நிலவும் ஊழல்கள் மற்றும் ஊழலுக்கு தீர்வு காண்பதற்கும் நாங்கள் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம். கேரளாவில் செழிப்பு, வளர்ச்சி மற்றும் நல்லாட்சியைக் கொண்டுவருவதற்கான எங்கள் முயற்சிகளில் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே எங்கள் கூட்டு இலக்கு” என்றார்.