மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு 3,832 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அன்பழகன் கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிகாலம் இந்த ஆண்டோடு நிறைவடைகிறது. இதையடுத்து, நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. இந்த வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில்தான் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு 3,832 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று மட்டும் 2,489 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் கடைசி நாளான நேற்று 121 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து மத்தியப் பிரதேச மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அன்பழகன் கூறுகையில், “2023-ம் ஆண்டுக்கான மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 21-ம் தேதி தொடங்கி, 30-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு 3,832 பேர் 4,359 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள். கடைசி நாளான நேற்று மட்டும் 2,489 பேர் 2,811 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத், அக்டோபர் 26-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அதேசமயம், தனது பாரம்பரியத் தொகுதியான புத்னியில் போட்டியிடும் தற்போதைய முதல்வர் சிவராஜ் சவுகான், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு நவம்பர் 2 -ம் தேதி கடைசிநாளாகும்” என்றார்.